Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Tamil - 2019

Proverbs 10 IRVTam

Side by side with the Father's Heart Bible™

சாலொமோனின் நீதிமொழிகள்

1சாலொமோனின் நீதிமொழிகள்:ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்;மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான்.

2அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது;நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.

3யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்;துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.

4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்;சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

5கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்;அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.

6நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்;கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

7நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்;துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும்.

8இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்;அலப்புகிற மூடனோ விழுவான்.

9உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்;கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.

10கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்;அலப்புகிற மூடன் விழுவான்.

11நீதிமானுடைய வாய் ஜீவஊற்று;கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

12பகை விரோதங்களை எழுப்பும்;அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும்.

13புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்;மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.

14ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்;மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.

15செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்;ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும்.

16நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும்,துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.

17புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்;திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.

18பகையை மறைக்கிறவன் பொய் உதடன்;புறங்கூறுகிறவன் மதிகேடன்.

19சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது;தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.

20நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி;துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

21நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்;மூடரோ மதியீனத்தினால் சாவார்கள்.

22யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்;அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார்.

23தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு;புத்திமானுக்கோ ஞானம் உண்டு.

24துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்;நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.

25சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்;நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்;

26பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ,அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.

27யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்;துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.

28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்;துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.

29யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு,அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம்.

30நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை;துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை.

31நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்;மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.

32நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்;துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.

TAM-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Tamil - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]