Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Tamil - 2019

Proverbs 17 IRVTam

Side by side with the Father's Heart Bible™

விவேகத்தினால் வரும் நன்மை

1சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட,சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம்.

2புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு,சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான்.

3வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்;இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா.

4தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்;பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.

5ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்;ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.

6பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்;பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே.

7மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது;பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது.

8லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்;அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.

9குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்;கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.

10மூடனை நூறடி அடிப்பதைவிட,புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும்.

11தீயவன் கலகத்தையே தேடுகிறான்;கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.

12தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட,குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல்.

13நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ,அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.

14சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்;ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு.

15துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும்,நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.

16ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு?அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.

17நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்;இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.

18புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான்.

19விவாதப்பிரியன் பாவப்பிரியன்;தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.

20மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை;பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான்.

21மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்;மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.

22மனமகிழ்ச்சி நல்ல மருந்து;முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும்.

23துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான்.

24ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்;மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும்.

25மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும்,தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.

26நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.

27அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்;விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.

28பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்;தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.

TAM-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Tamil - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]